கடந்த 12 ஆண்டு இடைவெளியின் பின் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்காரத் திருவிழா
ஆரம்பம் 24.09.2012 திங்கட்கிழமை

நாட்டில் நிலவிய யுத்த சூழ்நிலைகள் காரணமாக நாகர்கோவில் வாழ்மக்கள் கடந்த 2000ம் ஆண்டு இடம்பெயர வேண்டிய ஒரு துர்ப்பாய்கிய நிகழ்வ இடம்பெற்றது.இதன் பின் 2011ம் ஆண்டு யூலை மாதம் 21ம் திகதி மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப் பட்டனர். கடந்த 12 வருடகால இடைவெளியின் பின்மிகவும் விமரிசையாக நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவ திருவிழா எதிர்வரும் 24.09.2012 திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது என்பதனை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். 7 வது நாள் கப்பல் திருவிழாவும், 8 வது நாள் வேட்டைத் திருவிழாவும், 9வது நாள் சப்பறத் திருவிழாவும் 10வது நாள் சமுத்திர தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற உள்ளன காணுதற்கரிய இப்பெருவிழாவினை உலகெங்கும் பரந்து வாழும் பூர்வீக நாகதம்பிரான் அடியார்கள் யாவரும் தரிசித்து பேரின்பமும் பெருவாழ்வும் பெற்று வாழ நாகதம்பிரான் பாதார விந்தங்களைப் பணிந்து வேண்டி நிற்கின்றோம்.

நாகர்கோவில் கிராமம்

இலங்காபுரியின் தலையென விளங்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பருத்தித்துறைப் பட்டணத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் மருதம், முல்லை, நெய்தல் போன்ற நிலப்பரப்பினைக் கொண்ட நாகர்கோவில் என்னும் புராதன புண்ணிய பூமியில் எழில்மிகு உன்னத மருதமரச் சோலையின் மத்தியில் மக்களின் துயர்களைந்து அருளாட்சிபுரியும் வரலாற்றுச் சிறப்பு மிக்க பூர்வீக நாகதம்பிரான் கோயில் கொண்டுள்ளார்.இலங்கைத் திருநாடு எங்கும் பரந்துபட்டு வாழும் இந்துக்களின் வழிபாட்டுக்குரிய புராதன சிவதலங்களில் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரானும் ஒன்றாகும்.

நாகர் இனமக்கள் ஆதியில் வாழ்ந்த காரணத்தால் இவ்வூர் நாகர்கோவில் என்னும் பெயர் கொண்டு அழைக்கப்படலாயிற்று என்று கூறப்படுகின்றது. பண்டைக்கால மட்பாண்டங்கள் மற்றும் அவற்றின் எச்சங்கள் என்பன இவ்வூர் ஓர் புராதன கிராமம் என்பதற்கு சான்று பகர்கின்றது. ஆதியில் இங்கு வாழ்ந்த நாகர் சாதியினர் நாக வணக்கத்தை உடையவர்களெனவும் தமது அரசனை தலைவனை ‘தம்பிரான்’ என்று அழைக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தனர் எனவும் அறிய முடிகிறது. இதன் காரணமாகத் தமது குலதெய்வத்திற்கு நாகதம்பிரான் என்ற பெயரைச் சூட்டிவழிபட்டு வந்துள்ளனர் என அறியப்படுகின்றது. பிற்காலத்தில் சேர,சோழ, பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின்போது இக்கிராமம் அவர்கள் வசப்பட்டதாகவும் இந்தியாவில் உள்ள நாகர்கோவில் என்னும் இடத்தில் இருந்து வந்த தமிழ் மக்களே இக்கிராமத்தில் குடியேறினார்களெனவும் எம்மவர் கூறுவர். இதற்கு ஆதாரபூர்வமான சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்

இங்கு வாழ்ந்த நாகர் என்னும் சாதியினர் வழிபாடுசெய்த மரவடியில் திருவருள் விளங்கக்கண்டு இவர்களும் அம்மரவடியில் வழிபாட்டினை மேற்கொண்டு வந்தனர், இவர்களுக்கு எம்பெருமான் அருள்பாலித்து வந்தார். இவர்களுள் நீலாம்புரி (மோகாம்புரி) என்னும் பொற்கொல்லன் சிறந்த பக்திமானாக வாழ்ந்து வந்தான், ஒருநாள் இவ்வூர் அரசன் இப்பொற்கொல்லனைத் தனது அரண்மனைக்கு வருவித்து பொன், பொருள் நல்கி தனது பிரசைகள் வழிபடுவதற்கு ஒரு திருவுருவை அமைத்துத் தரும்படி பணித்தான். அரசனின் ஆணையை மீறமுடியாத பொற்கொல்லன் செய்வதொன்றும் அறியாது தான் வழிபடும் இம்மரவடிக்குச் சென்று ‘இம்மரவடித் தெய்வம் எத் தெய்வமோ யான் அறியேன்’ இத்திருவுருவை யான் எப்படி வடிப்பேன். அரசன் பணியை நிறைவேற்ற நீதான் எனக்கு அருள்புரிய வேண்டும் என்று எம்பெருமானை வேண்டிக்கொண்டான்… நம்பினார்க்கு அருள்புரியும் எம்பெருமான் அன்று அவனது கனவில்தோன்றி அன்பனே! கவலைப்படாதே ஆதிநாதனின் திருவுருவத்தை நீ வழிபடும் அத்தி மரத்தில் காண்பாய் என்றுகூறி மறைந்தது.

மறுநாள் வைகறையில் எழுந்து தான் வழிபடும் மரவடியில் சென்று பார்த்தபொழுது விழுதேவிடாத அத்தி மரத்தில் விழுது ஒன்று ஐந்துதலை நாகரூபமாய் ஆடக்கண்டு பக்திப்பரவசத்தால் அகம் குளிர்ந்து மெய்சிலிர்த்து ஆடிப்பாடி வீடுசென்று தனது கைப்பட தாமிரத்தாலான ஐந்துதலை நாகபடத்தினை வடிவமைத்து அரசன்பணியை முடித்து நாகேஸ்வரர் அருளைப் பெற்றான் என நம் முன்னவர் கூறும் கர்ணாபரம்பரைக் கதையொன்றுண்டு;. அன்று முதல் அத்திரு நாகபடமே இம்மரவடி மூலமூர்த்தியாக விளங்கி அருள்பாலித்து வந்ததாக அறியப்படுகின்றது..அத்திரு நாகபடம் இன்றும் இவ்வாலய கர்ப்பக்கிரகத்தில் இருப்பதைக் நாம் காணலாம். .இப்பகுதி மக்களினால் பேசப்படும் கர்ணாபரம்பரைக் கதைகள்மூலம் இப்பகுதியில் நாகர் வாழ்ந்த காலத்தில் இருந்தே நாக வழிபாடு தோன்றியிருக்கலாம் என எண்ணுவதற்கு இடமுண்டு. இம் மரவடியில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் பூர்வீக நாகதம்பிரானுக்கு பிற்காலத்தில் இரகர் சிதம்பரர் என்பவர் களிமண்ணால் ஒரு சிறுகோவில் அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார். அவர்களது மூதாதையர்களின் காணியிலே இவ் ஆலயம் அமைந்துள்ளது. இரகர் சிதம்பரரின் பின் அவரது மகன் சிதமபரர் இரகர் என்பவர் சிறிய கோவிலாக இருந்த இக்கோவிலை 1845ம் ஆண்டிலே பெரிதாக களிமண்ணினால் அமைத்து தானே பூசகராகவும் தர்மகர்த்தாவாகவும் இருந்து பூசை ஆராதனைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இறுதியாக இவர்கள் பரம்பரையில் வந்த முருகேசு சதாசிவம் தனது மைத்துனி சிவக்கொழுந்துவுடன் இணைந்து1924ம் ஆண்டு முதல் 1933ம் ஆண்டு வரை இக்கோவில் பூசகராகவும் நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். அவர் காலமானதின் பின் அவரது மைத்துனி திருமதி முருகர் சிவக்கொழுந்து முத்துசாமி குருக்களை நியமித்து பூசை ஆராதனைகள், திருவிழாக்கள் முதலிய வற்றை மேற்கொண்டு வந்ததுடன் இக்கோவில் பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளராக முகாமையாளராக செயற்பட்டு வந்தார். அன்று முதல் முத்துச்சாமி குருக்கள் பரம்பரையினரே இக்கோவில் பூசகர்களாக இருந்து வருகிறார்கள். தற்பொழுது கணபதிசாமி குருக்களின் பின் அவரது மகன் நாகதம்பிரான் உபாசகர் சிவஸ்ரீ சிவசண்முகக் குருக்கள் ஆலய பிரதம குருவாக இருந்து வருகிறார். திருமதி முருகர் சிவக்கொழுந்துவின் பின் அவரது மகன் சிதம்பரப்பிள்ளை 1978ல் ஆலய பரிபாலன சபையை அமைத்து பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளராக தலைவராக செயற்பட்டு வந்தார்.

யுத்த அனர்த்தங்கள்

இந் நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களினால் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் இக்கிராம மக்கள் அனைவரும் இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த10 ஆண்டுகளாக இப்பிரதேசம் மனித நடமாட்டமற்ற அதி உயர் பாதுகாப்பு வலயமாகஇருந்து வந்துள்ளது.இவ் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் எதுவும் இடம்பெறவில்லை. 2000ம் ஆண்டில் ஏற்பட்ட இடப் பெயர்வின் பின்னர் 2009ம் ஆண்டில் இந் நாட்டில் நிலவிய கொடூர யுத்தம் முடிவுக்கு வந்தது. சமாதான சூழ்நிலை ஏற்பட்டதன் பின் 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்23ஆம் திகதி முதல் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கும், நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் சென்று பூசை வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. பூர்வீக நாகதம்பிரான் ஆலயம் யுத்த அனர்த்தங்களினால் பலத்த சேதத்திற்குள்ளாயிருந்தது.

23.08.2009 ல் இவ்வாலயம் மீண்டும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகளை உடனடியா ஆரம்பிக்க வேண்டியிருந்தது இதனால் பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு. முருகர் சிதம்பரப் பிள்ளையின் மகன் திரு. சிதம்பரப்பின்ளை இராஜறஞ்சன் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் திரு.ந.திருலிங்கநாதன் அவர்களின் அனுசரணையுடன் இடைக்கால பரிபாலன சபையினை 20.12.2010ல் ஏற்படுத்தி யுத்த சூழ்நிலைகளால் சிதைவடைந்திருந்த இவ் ஆலய கட்டுமான பணிகளை தென்னிந்திய பிரபல சிற்பக் கலைஞர் உயர்திரு .கே.புருஷோத்தமன் (ஸ்தபதி); அவர்களிடம் ஒப்படைத்தார். .இவ்வூர் வெளியூர் மக்களின் நிதி உதவியுடன் அவரது கைவண்ணத்தில் புனரமைக்கப்பெற்று அழகுற சுந்தர விமானம் அமைத்து வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படும் பூர்வீக நாகதம்பிரான் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா 04.06.2012ல் நடைபெற்றதனை யாவரும் அறிவீர்.

மூலமூர்த்தி

ஆதியில் பக்திமான் மோகாம்புரி (நீலாம்புரி) என்னும் பொற்கொல்லனால் தாமிரத்தால் வடிக்கப்பெற்ற ஜந்துதலை நாகபடத்தினையே இவ்வாலய மூல மூர்த்தியாககொண்டு பூசை வழிபாடுகளை மேற்கொண்டு வந்துள்ளனர். தற்பொழுது சிவலிங்கத்தை உள்ளடக்கிய ஐந்துதலை நாகபடத்தையே இத்தல மூலமூர்த்தியாக கொண்டு வழிபட்டுவருகிறார்கள். இங்கு நடைபெறும் பூசை நைமித்தியங்கள் யாவும் சிவனுக்கு உரியதாகவே நடைபெறுகின்றன.

தல தீர்த்தம் மற்றும் மருந்து

இத்தலத்தினை சுற்றிவர ஐந்து வகையான தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் பெண்டுகள்கேணி சக்தி தீர்த்தமெனவும், உப்புக்கேணி சமுத்திரதீர்த்தம் எனவும், நாககேணி நாகேஸ்வரப்பெருமான் தீர்த்தமாடும் நாகதீர்த்தமெனவும், திருவெம்பா காலத்தில் நடராசர் தீர்த்தமாடும் சம்புக்கேணி சிவதீர்த்தமெனவும், மார்கழிக்கேணி தனுதீர்த்தம் அல்லது பிண்டதீர்த்தமெனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஐந்துவகைதீர்த்த விசேடம் பொருந்திய புண்ணிய தலமாக அமையப்பெற்றுள்ளது.ஆலயவளாகம் எங்கும் வானுயர வளர்ந்த மருதமரச் சோலைகள் தலவிருட்சமாகவும், கொடிய விஷஜந்துக்களால் கடியுண்டவர்கள் ஆலய கர்ப்பக்கிரகத்தில் கோயிற் பாம்பு குடிகொண்டீருக்கும் இடத்தில் கிடைக்கும் திருவருளேறிய திருமருந்தை .ஆதிமூலம் நாகதம்பிரானில் நம்பிக்கை உடையவராய் நாகேஸ்வரர் தீர்த்தமாடும் குளவாழைகள் நிறைந்த நாககேணியில் உள்ள நீரில் கரைத்து கடியுண்டபகுதியில் பூசியும் உட்கொண்டும் பூரண சுகமடைவதனை காணலாம். இவ்வற்புத மருந்துதான் என்ன எனஅறிய யாவரும் விரும்புவர்.

மருந்தின் மகிமையைககூறலாமேயன்றி மருந்தின் தன்மையைக் கூறவல்லவர் எவருமில்லையெனலாம். திருவருளேறியதிருமண் ‘மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் நம்பினவற்கே நன்மை பயக்கும்’. நம்பினாற்கு நஞ்சறும். நம்பாதாற்கு மிஞ்சிடும். இவ்வற்புத மருந்தின் மகத்துவத்தை அனுபவரீதியாகக்கண்ட அடியவர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கு வருகைதந்துகொண்டு இருப்பதை இன்றும் நாம் காணக்கூடியதாக உள்ளது.’திருமருந்து’அழியாது நிலைத்துநிற்க நாகதம்பிரானின் நல்லருளும் அனுக்கிரகமும் கிட்டுவதாக.

இங்கே பெருமளவான சற்ப்பங்கள் மண்டலமிட்டிருக்கின்ற நிலையில் இவை வானுயர ஓங்கி வளர்ந்துள்ள ஆலய தலவிருட்சத்தில் குடிகொண்டிருக்கின்ற ‘ஆலர்’ எனும் பெயர்கொண்ட கெருட இனப்பட்சிகள் காலை மாலை நேரங்களில் ‘ஞாக் ஞாக்’ என எழுப்பும் ஓசையினை கேட்டு அஞ்சி நடுகங்கி தத்தமது இருப்பிடம் செல்வதும் மேற்கூறிய ஆலாவின் நிழல் பட்டும் விஷக்கடியுண்டவர்கள் குணமடைவதும் ஒரு சிறப்பு அம்சமாகும்.

கப்பல் திருவிழா வரலாறும் அதன் சிறப்பும் 

நாகேஸ்வரப் பெருமானை எம்மவர் சிறைமீட்டவன் என்றும் அழைப்பர்.; இப்பதியில் புரட்டாதி மாதத்தில் பத்துத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. .இதில் கப்பல் திருவிழா புரட்டாதி மாத பூரணையின் மறுநாள் ஏழாவது விழாவாக வருடா வருடம் பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இலங்கையிலுள்ள சிவதலங்கள் எதிலும் கப்பல் திருவிழா கொண்டாடப்படுவதில்லை. ஆனால், எமது நாகர்கோவில் கிராமத்தில் மட்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. இவ் விழாவிற்கும், இக்கிராமத்திற்கும், இப்பதிக்கு வடக்கே உள்ள கவுத்தந்துறை துறைமுகத்திற்கும், நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான், கண்ணகைஅம்மன் ஆலயஙகளிற்கும்; நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் காணலாம்.

முன்னொருகாலத்தில் தென்னிந்தியாவில் சம்புத்தீவு என்னும் பிரிவைச்சேர்ந்த திருவனந்தபுரம் பெருமழை காரணமாக அழிந்து பெருந்தொகையான மக்கள் இறந்து போயினராம்.. இப்பகுதியில் மக்களைக் குடியேற்றுவதற் விரும்பிய அந்நாட்டு மன்னன் சேர,சோழ,பாண்டிய மண்டலங்களில் ஒன்றாக விளங்கிய இலங்கைத் தீவிலிருந்து மக்களைக் கொண்டு செல்வதற்காக தனது சேனைத் தலைவர்களையும் படைகளையும் அனுப்பியிருந்தான். இப்படைகள் தனுஸ்கோடிக்கரையாக காங்கேசன்துறை, மயிலிட்டி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கற்கோவளம் ஆகிய பகுதிகளில் வியாபாரத்தை மேற்கொண்டு அங்குள்ள மக்களில் சிலரையும் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் கவுத்தந்துறையில் புரட்டாதி மாதம் நங்கூரமிட்டனர்.

ஏழு நாட்களாகத் தங்கிநின்றபோதும் ஒருவர்கூடப்போய் இவர்கள் கொண்டுவந்த பொருட்களை வாங்கவில்லை. இதனால் கோபமடைந்த படைத் தலைவன் தாங்கள் கொண்டுவந்த வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள,; சவுளிவகைகள், விளையாட்டுப் பொருட்கள் முதலியவற்றைக் பெற்று தங்களுடன் வந்து பெருமழையினால் அழிந்த திருவனந்தபுரம் பகுதியில் குடியேறி சந்தோசமாக வாழும்படி அழைப்பு விடுத்தான். எம்மவர் அவர்களுடன் செல்வதற்கு மறுப்பினைத் தெரிவித்தார்கள். கோபமடைந்த படைஅதிகாரி எல்லோரையும் பலவந்தமாக கப்பலில் ஏற்றும்படி கட்டளையிடடார்.;. படைஅதிகாரியின் கட்டளைப்படி படையினர் வலுக்கட்டாயமாக மக்களைக் கப்பலில் ஏற்றினார்கள். இதனால் இக்கிராம மக்கள் மனமுடைந்து ‘நாகதம்பிரானே எம்பதி;மக்களை அன்னியர் சூறையாடுகிறார்கள் எம்மக்களைக் காப்பாற்றுவாயாக’ என்று தமது குலதெய்வம் நாகதம்பிரான் முன்னிலையில் ஓலமிட்டு அலறி முறையிட்டார்கள்.

கப்பல் பிரயாணத்துக்கு ஆயத்தமானது. ஆனால் கப்பல் நகரவில்லை. படையினர் பாய்மரங்களை பரிசோதித் தார்கள். பாய்மரத்திலே பாம்பொன்று காணப்பட்டது. ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ படையினர் கப்பல்துரைக்கு தெரியப்படுத்தினர்..கப்பால்துரை சர்ப்பத்தை வெட்டும்படி கட்டளையிட்டார்.. படையினர் சர்ப்பத்தை வெட்டினார்கள். அடியார்க் கெளியனாகிய நாகேஸ்வரப்பெருமான் தனது திருவிளையாடலைக் காட்டத் திருவுளங் கொண்டார். வெட்டுண்ட சர்ப்பத்தின் இரத்தத் துளிகளிலிருந்து பல ஆயிரம் சர்ப்பங்கள் தோன்றின. படையினர் நிலைகுலைந்து தடுமாறினார்கள.; அப்பொழுது படையினரில் ஒருவன் பக்திமயப்பட்டு ஆவேசம்கொண்டு இப்பகுதி மக்களை இறக்கிவிட்டால் மட்டுமே இக் கப்பல் நகரும் என்;று கூறினான். கப்பலில் பல பகுதி மக்களும் இருக்கிறார்கள் இப்பகுதி மக்களை எப்படி அடையாளம் காணலாம் என்று கப்பல்துரை ஆவேசகாரனை வினவவினார்.

ஆவேசகாரன் அரிசிமாவினை அள்ளிவீசி இவவூர் மக்களுக்கு மாக்குறிப் பொட்டிருக்கும.;மாக்குறிப்பொட்டுக் கண்டவர்களை இறக்கினால் கப்பல் நகரும்; எனக்கூறினான். மாக்குறிப் பொட்டுக் கண்டவர்களை இறக்குமாறு கப்பல்துரை பணித்தார்.மாக்குறிப்பொட்டுக் கண்டமக்கள் இறக்கப்பட்டனர். ஒவ்வொருவரையும் இறக்கும் போது ஒவ்வொரு பாம்பும் இறங்கியது.. ஆனால் கப்பல் நகரவில்லை. மீண்டும் ஆவேசகாரரிடம் கப்பல்துரை கப்பல் நகரவில்லையேயென வினவினார். கீழ்தளத்தில் ஒரு அறையில் ஒரு அழகிய பெண் பிள்ளையையும் அவளது விளையாட்டுத் துணையாகிய ஒரு பூனைக் குட்டியும் உண்டு. அவர்களையும் இறக்கினால் கப்பல் நகரும் என்றான். பெண்பிள்ளையும் பூனைக்குட்டியும் இறக்கப்பட்டனர். கப்பலில் காணப்பட்ட இரண்டு பாம்புகளும் இறங்கின. எம்பதி மக்களைக் காக்கும் எம்பரம்பொருள் ஐந்துதலை நாகமாக காட்சிகொடுத்தார். படையினர் பக்திப்பரவசத்தால் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணகினார்கள்.

நாகர்பதிவாழ் மக்களை இறக்கியதும் கப்பல் நகரத்தொடங்கியது. இதனால் நாகேஸ்வரப் பெருமானை ‘சிறைமீட்டவனே’என்றுகூறி எமது மக்கள் வணங்குவதும் உண்டு. ஐந்துதலை நாகபாம்பாக காட்சிகொடுத்த எம்பெருமான் கவுத்தந்துறையிலிருந்து நாகதம்பிரான்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்துசேர்ந்தார்;. அன்றுமுதல் அவ்விழாவினை வருடந்தோறும் எம்மவர்கள் புரட்டாதி மாதத்தில் வரும் பூரணைக்கு மறுநாள் மிகவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள் .கவுத்தந்துறையிலிருந்து எம்பெருமான் வந்தபாதையை எம்மவர்’நாகம்சரிந்த வாய்க்கால்’ என்று அழைக்கின்றனர்.; கோயிலின் பின் புறமாக இவ்விடம் கவுத்தந்துறைவரை பள்ளமாக இருப்பதைக் காணலாம். கப்பலிலிருந்த பெண்பிள்ளை இப்பகுதி மக்களால் வழிபட்டுப் போற்றப்படும் நாகதம்பிரான் கோவிலுக்கு வடக்கே கோவில் கொண்டிருக்கும் கண்ணகை அம்மன் என்றும் எம்மவரால் பேசப்படுகிறது.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலனசபை
18.09.2012

Leave a Reply

You must be logged in to post a comment.

Gallery
Calendar
November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Visitors Counter