பலரும் பலவாறு கூறினாலும் நாகர்கோவில் என்னும் பெயர் ஆதிகாலத்தில் நாகர் சாதியினர் வாழ்ந்த காரணத்தினால் ஏற்ப்பட்டது என்று கூறுவதே ஏற்புடையதாகும். நாகர் சாதியினர் நாக வணக்கத்தை உடையவர்களாகவும், தமது அரனைஃதலைவனை ‘தம்பிரான்’ என்று அழைக்கும் வழக்கத்தினைக் கொண்டீருந்தனர் எனவும் அறிய முடிகிறது. இதன்காரணமாகத் தமது குலதெய்வத்திற்கு நாகதம்பிரான் என்ற பெயரைச் சூட்டிவழிபட்டு வந்துள்ளனர் என எண்ணுவதற்கு இடமுண்டு. பிற்காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படையெடுப்பின்போது இக்கிராமம் அவர்கள் வசப்பட்டதாகவும் அங்கிருந்து வந்த தமிழர்களே இக்கிராமத்தில் குடியேறினார்களெனவும் எம்மவர் கூறுவர். இதற்கு ஆதாரபூர்வமான சான்றுகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. முன்பு நாகர் வழிபாடுசெய்த மரவடியில் திருவருள் விளங்கக்கண்டு இவர்களும் அம்மரவடியில் வழிபட்டு வந்தனர் என்றும்,இவர்களுக்கும் எம்பெருமான் அருள்பாலித்து வந்தாரெனவும் அறியப்படுகின்றது.

இவர்களுள் மோகாம்புரி என்னும் பெயரையுடைய பொற்கொல்லன் ஒருவன் சிறந்த பக்திமானாக வாழ்ந்து வந்தாரெனவும், ஒருநாள் இவ்வூர்அரசன் இப்பொற் கொல்லனைத் தனது அரண்மனைக்கு வருவித்து தனது பிரசைகள் வழிபடுவதற்கு ஒரு திருவுருவை அமைத்துத் தரும்படி பணித்தானாம். அரசனின் ஆணையை மீறமுடியாத பொற்கொல்லன் செய்வதொன்றும் அறியாது இம்மரவடிக்குச் சென்று ‘இம்மரவடித் தெய்வம் எத் தெய்வமோ யான் அறியேன்’ இவ்வுருவை யான் எப்படி வடிப்பேன். இறiவா! நீதான் எனக்கு அருள்புரிய வேண்டும் என்று எம்பெருமானை வேண்டி நின்றானாம். நம்பினார்க்கு அருள்புரியும் நாகதம்பிரான் அன்று அவனது கனவிலேதோன்றி அன்பனே! கவலைப்படாதே ஆதிநாதனின் திருவுருவத்தை நீவழிபடும் அத்தி மரத்தில் காண்பாய். அதன்படி அரசனின் பணியை முடிப்பாய் என்றுகூறி மறைந்ததாம்.அவ்வாறே மறுநாள் வைகறையில் எழுந்து மனக் களிப்புடன் தான்வழிபடும் மரவடியில் சென்று பார்த்பொழுது விழுதேவிடாத அத்தி மரத்தில் விழுது ஒன்று ஐந்துதலை நாகரூபமாய் ஆடக்கண்டு அகம்குளிர்ந்து மெய்சிலிர்த்து ஆடிப்பாடி வீடுசென்று தனது கைப்பட தாமிரத்தாலான ஐந்துதலை நாக படத்தினை வடித்து அரசன் பணியை முடித்து எம்பெருமானின் அருளைப்பெற்றான் என நம்முன்னவர் கூறும் காணாபரம்பகை; கதையொன்றினை அவர்கள் கூறக்கேட்டு அறிந்து உள்ளோம். அன்று முதல் அத்திரு நாகபடமே இத்தல மூலமூர்த்தியாக விளங்கி அருள் பாலித்து வருகின்றது. இப்பூர்வீக நாகதம்பிரான் ஆலய வழிபாடு எப்பொழுது ஆரம்பமானது என்று எவராலும் கூறமுடியாது.எனினும் இப்பகுதி மக்களினால் பேசப்படும் கர்ணாபரம்பரைக் கதைகள்மூலம் இப்பகுதியில் நாகர் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் தோன்றியிருக்கலாம் என எண்ணுவதற்கு இடமுண்டு.

இம்மரவடியில் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்ட பூர்வீகநாக தம்பிரானுக்கு பிற்காலத்தில் பரமாந்தர் இரகர் என்பவர் களிமண்ணால் ஒரு சிறுகோவில் அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டு வந்தார் என்று அறியப்படுகின்றது.அதன்பின் அவர்களது பரம்மரையில் வந்த சிதமபரர் இரகர் என்பவர் சிறிய கோவிலாக இருந்த இக்கோவிலை 1845ம் ஆண்டிலே பெரிதாக களிமண்ணினால் அமைத்து பூசை ஆராதனைகளை மேற்கொண்டு வந்தார் இறுதியாக இவர்கள் பரம்பரையில் வந்த முருகேசு சதாசிவம் என்பவர் 1924ம் ஆண்டுமுதல் 1933ம் ஆண்டு வரை இக்கோவில் பூசகராக இருந்து வந்தார். அவர் காலமானதின் பின் இக்கோவில் பூசை ஆராதனைகளுக்கு பிராமணர்கள் நியமிக்கப் பட்டார்கள். அன்றுமுதல் இக்கோவில் பரம்பரையில் வந்த திருமதி. முருகர் சிவக்கொழுந்து பரம்பரை நம்பிக்கைப் பொறுபாளராகவும் முகாமையாளராகவும் செயற்பட்டு வந்தார்;;. பின்னர் அவரது மகன் திரு.முருகர் சிதம்பரப்பிள்ளை 1978ல் ஆலய பரிபாலன சபை ஒன்றினை ஏற்படுத்தி பரம்பரை நம்பிக்கைப் பொறுப்பாளராகவும் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.அவரது தலைமையில் இக்கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தது. 2000ம் ஆண்டில் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின் 2009ம் ஆண்டு முதல் பரம்மரை நம்பிக்கைப் பொறுப்பாளராக தலைவராக அவரது மகன் திரு.சிதம்பரப்பிள்ளை இராஜறஞ்சன் செயற்பட்டு வருகிறார். அவர் ஆலயபரிபாலன சபையிருடன் இணைந்து நாகதம்பிரானின் திருப்பணி வேலைகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்பொழுது சைவசமயத்தவர்களாகிய நம்மவர் சிவலிங்கத்தை உள்ளடக்கிய ஐந்துதலை நாகபடத்தையே இத்தல மூலமூர்த்தியாக கொண்டு வழிபட்டு வருவதைக்காணலாம். இங்கு நடைபெறும் பூசை நைமித்தியங்கள் யாவும் சிவனுக்கு உரியதாகவே நடைபெற்று வருவதினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

எல்லைகள்

இவ் ஆலயத்தின் வடக்கே பிரசித்திபெற்ற நாகர்கோவில் கண்ணகை அம்மன்,நரசிங்க வைரவர், வீரபர்திரர்ஆலயங்களும். மணல்மேடுகளும் நாவல் மரங்களும் தெற்கே வயல் நிலங்களும், பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியும்,தொண்டமானாறு கடல்நீர் ஏரியும்,கிழக்கே சுடலைப்பிட்டி பிள்ளையார். குடாரப்பு முருகையா ஆலயங்களும் வயல் நிலங்களும், மணல்மேடுகளும்,பனை,தென்னை மரங்களும். மேற்கே பெரியதம்பிரான், நாச்சிமார் ஆலயங்களும் வயல் நிலங்களும், பனை,தென்னை மரங்களும் அம்பன் கிராமமும் உண்டு.

தல தீர்த்தம்

இத்தலத்திற்கு அருகாமையில் ஐந்து வகையான தீர்த்தங்கள் உண்டு. இவற்றில் பெண்டுகள் கேணி சக்தி தீர்த்தமெனவும், உப்புக்கேணி சமுத்திர தீர்த்தம் எனவும், நாககேணி நாகேஸ்வரப்பெருமான் தீர்த்தமாடும் நாக தீர்த்தமெனவும், திருவெம்பா காலத்தில் நடராசர் தீர்த்தமாடும் சம்புக்கேணி சிவதீர்த்தம் எனவும், மார்கழிக்கேணி தனுதீர்த்தம் அல்லது பிண்டதீர்த்தம் எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு ஐந்து வகை தீர்த்த விசேடம் பொருந்திய புண்ணிய தலமாக விளங்குகிறது.

அற்புதங்கள் – கோவில்மருந்து

ஆதிமுதல் இன்றுவரை இக்கிராம மக்கள் எவ்வித கொடிய விஷஜந்துக்கள் தீண்டினாலும் வைத்தியம் செய்வது கிடையாது. ஆதிமூலம் நாகதம்பிரானில் நம்பிக்கை உடையவராய் நாகேஸ்வரர் தீர்த்தமாடும் குளவாளைகள் நிறைந்த நாககேணியில் உள்ளநீரினை எடுத்து  அவரது சன்னிதியில் கிடைக்கும் அருமருந்தினை அந்நீரிலே கரைத்து உட்கொண்டும், கடி இடத்தில் பூசியும்வரச் சுகமடையலாம். இதனை நாம் இன்றும் காணலாம். இவ் அற்புத மருந்துதான் என்ன எனஅறிய யாவரும் விரும்புவர்.மருந்தின் மகிமையைக் கூறலாமேயன்றி மருந்தின் தன்மையைக் கூறவல்லவர் எவருமில்லையெனலாம். திருவருளேறிய திருமண் மந்திரமும் தேவும் மருந்தும் குருவருளும் நம்பினவற்கே நன்மை பயக்கும். நம்பினாற்கு நஞ்சறும். நம்பாதாற்கு மிஞ்சிடும். இவ்வற்புத மருந்தின் மகத்துவத்தை அனுபவரீதியாகக் கண்ட அடியவர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றவேண்டி இப்பூர்வீக நாக  தம்பிரான் ஆலயத்திற்கு வருகைதந்து கொண்டிருப்பதை இன்றும் நாம் காணக்கூடியதாக உள்ளது.’திருமருந்து’ அழியாது நிலைத்துநிற்க நாகதம்பிரானின் நல்லருளும் அனுக்கிரகமும் கிட்டுவதாக

கோவில் எண்ணெய்

நாகேஸ்வரப் பெருமான் தீர்த்தமாடும் குளவாழைகள் நிறைந்த நாககேணியில் தீர்த்மாடி ஆதிமூலம் நாகதம்பிரானின் மூலஸ்தானத்தில் எரிக்கப்படும் விளக்கின் எண்ணெயைப் பூசிவர விஷக்கடி காணக்கடி ஆகியவற்றால் ஏற்படும் புண்கள், குட்டை, சிரங்கு முதலிய நோய்பிணிகள் நீங்குவதாக எமது கிராமமக்கள் நம்புகின்றனர். இப்பொழுதும் இக்கிராம  மக்களில் பெரும்பாலானவர்கள் பூசை வழிபாடுகள் முடிவடைந்த பின்னர் இவ்வாலயத்தின் மூலஸ்தானத்தில் எரிக்கப்படும் விளக்கின் எண்ணெயினைப் பெற்றுச்செல்வதைக் காணலாம்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலனசபை