இலங்கையின் வடபாகமாயுள்ள யாம்ப்பாணம் குடாநாட்டின் வடமுனையில் பருத்தித்துறை நகரின் கீழ்திசையில் 16 கிலோ மீட்டர் தொலைவில் பருத்தித்துறை மருதங்கேணி பிரதான வீதியில் வரலாற்றுப் புகழ்மிக்க நாகர்கோவில் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு, நாகர்கோவில் வடக்கு என்னும் மூன்று பெரும் பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இங்கு மருதநிலமும், பாலைநிலமும், பொருந்தியுள்ள இடத்தில் மிகப்பழம் தொன்மை வாய்ந்த நாகர்கோவில பூர்வீக நாகதம்பிரான் ஆலயமும், பிரசித்தி பெற்ற நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலயமும் உண்டு. இக்கிராமத்திற்கு நாகர்கோவில் என்னும் பெயர் கொண்டதையிட்டு பலரும் பலவாறு கூறுவர்.ஆதியில் இங்கு பெரும்தொகையான நாகசர்ப்பங்கள் மண்டலமிட்டு இருந்த காரணத்தினால் இப்பெயர் உண்டானதென்றும், வரலாற்றுப் புகழ்கொண்ட பூர்வீக நாகதம்பிரான் கோவில்கொண்டு எழுந்தருளியிருந்த காரணத்தினால் உண்டானதென்றும், ஆதியிலே பழம்குடி மக்களாகிய இயக்கர், நாகர் காலத்திலுள்ள நாகர் என்ற சாதியினர் வாழ்ந்த காரணத்தினாலும் நாகரது சிற்றூராக விளங்கிய தன்மையினாலும் இப்பெயர் உண்டானதென்றும் நம்முன்னவர்கள் கூறுவர். யாவும் ஏற்புடையதேயாயினும் பழம்குடி மக்களாகிய நாகர்சாதியினர் வாழ்ந்துவந்த காரணத்தினால் நாகர்கோவில் என்றபெயர்உண்டானதென்று கொள்ளப்படுவதே ஏற்புடையதாகும்

நாகர்கோவில் என்னும் பெயரில் தென்னிந்தியாவில் மலையாளப் பகுதியில் திருநெல்வேலி சில்லாவில் ஒரு கிராமம் உண்டு. இங்கும் ‘நாகஅம்மன்’ என்றபொருடன் ஒருபுனித தலம் இருப்பதாகவும் அறியப்படுகின்றது. எனவே, நாகர்கோவிலில் வதியும் மக்களின் பூர்வீகம் தென்னிந்திய நாகர்கோவிலில் இருந்துவந்து குடியேறியவர்களாக இருக்கலாம் என்று எண்ணுதற்கு இடமுண்டு. இங்கே நாகர்கோவில் வடக்கில் கவுத்தந்துறை என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்ற ஒருதுறைமுகம் உண்டு. இத் துறைமுகத்திற்கும் இங்கே கோவில்கொண்டு எழுந்தருளியிருக்கும் நாகதம்பிரான், கண்ணகை அம்மான் ஆலயங்கள் ஆகியவற்றிற்கும் ஓருதொடர்பு உண்டு. நாகர்கோவிலுக்கு ஐந்துமைல் சுற்றாடலில் சோழன் குடியிருப்பு, செம்பியன்பற்று என்று சோழனின் பெயர் குறிப்பிட்டு வழங்கும் கிராமங்கள் உண்டு. மேலும் இக்கிராமத்தின் சுற்றுப்புறங்களில் காணப்படும் புராதன மட்பாண்டங்களின் சிதைவுகளும் பண்டைய நாணயங்களும் இக்கிராமத்தில் ஒருசிறு இராசதானி இருந்திருக்கலாம் என்று எண்ணுவதற்கு இடமுண்டு.

தொழில்

நாகர்கோவில் தெற்கு, குடாரப்பு, ஆகிய பிரிவுகளில் வதியும் மக்களின் பிரதான தொழில் விவசாயம். நாகர்கோவில் வடக்கில் வதியும் மக்களின் பிரதான தொழில் மீன்பிடி.இங்கு வாழ்ந்த மக்கள் கல்விமான்களாகவும், கலைகலாச்சார விழுமியங்களில் ஈடுபாடுடையவர்களாகவும், பெரும்பாலானோர்ஆசிரியர்களாகவும்,அண்ணாவிமார்களாகவும் இருந்துள்ளனர் . தற்பொழுது இவர்களில் பலர் அரசநிர்வாகத்துறைகளிலும்,வங்கிகளிலும்,தனியார்துறைகளிலும் பலபொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்துவருகின்றனர். மேலும் பலர் மருத்துவர்களாகவும், பொறியிலாளர்களாகவும்., ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர்.அத்துடன் பாரம்பரிய கலைத்துறையிலும், நாடகத்துறையிலும் வல்லுனர்களாகத் திகழ்ந்து பலநாடகங் களையும்,நாட்டுக்கூத்துக்களையும் மேடையேற்றி இக்கிராமத்திற்கு பெருமைசேர்த்து உள்ளனர் அத்துடன் சமையப்பற்று உடையவர்களாகவும் ஆலயங்களில் புராண இதிகாசங் களுக்கு பொருள்விரித்துக் கூறிவருவதும் இப்பகுதி மக்கள் பாரம்பரிய பண்பாடு, கலை கலாச்சாரங்களைப் பேணிவருவதற்கு ஒரு சான்றாகும் 2000ம் ஆண்டில் ஏற்பட்டஇடப்பெயர்வு காரணமாக பலர் புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துவருவதும் நோக்கற்பாலது. 2000ம்ஆண்டில் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் இன்றுவரை இப்பகுதி மக்கள் மீளக்க குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. எனினும் 2009ம் ஆண்டில் ஏற்ப்பட்ட சமாதான சூழ்நிலையை தொடர்ந்து இக்கிராமத்தில் மிகப்பிரசித்திபெற்ற நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்திற்கும்,நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் சென்றுபூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலனசபை