Archive for October 1st, 2015

நாகர்மணல் என்னும் இணையதளத்தில் நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவத்தில் ஒன்று தொடக்கம் ஆறு வரையான திருவிழாக்கள் சம்பந்தமாக வெளிவந்துள்ள செய்திபற்றி இவ்வாலயத்தின் பரிபாலனசபை என்ற வகையில் சில விடயங்களைத் தெளிவுபடுத்துகிறோம்.

குறித்த இவ்வாலயத்தைப் புனரமைப்புச் செய்வதற்கான அனுமதியைப் பாதுகாப்புத் தரப்பினர் வழங்கியபோது வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பொருத்தமான ஒரு சபை இன்மையால் ஆலயத்தின் பரம்பரைத் தலைவர் { நம்பிக்கைப் பொறுப்பாளர் வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபருக்கு விடுத்த கோரிக்கைக்கமைய வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபரால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் ஓர் இடைக்கால யாப்பினைத் தயாரித்து அந்த யாப்புக்கு அமைவாக குறித்த ஆலயத்தில் ஏழு தொடக்கம் பத்து வரையான திருவிழா உபயகாரர்களிலிருந்து ஆறு (6) சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு ஒழுங்கு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாகர்கோவில் வடக்கைச் சேர்ந்த சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததிலிருந்து குறித்த இந்நபர்களின் தூண்டுதலினால் உருவான ஒரு குழுவினர் இவ்வாலய வளர்ச்சிக்குக் குந்தகமாகவும், தடையாகவும்,குழப்பமாகவும் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள்.

குறித்த ஆலயத்தில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் மேற்குறித்த நாகர்மணல் என்ற இணையதளத்தினூடாக இவ்வாலயக் கட்டுமானப் பணிகளுக்கு எவரும் நிதி வழங்க வேண்டாம் என்று பகிரங்கமாக அறிவித்ததுடன், நிதிப்பங்களிப்புச் செய்வதையும் தவிர்த்து இவ்வாலயக் கட்டுமானப் பணிகளுக்குக்
குந்தகம் விளைவித்தனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் வசிக்கும் இக்குழுவைச் சேர்ந்தவர்கள் இவ்வாலயத்தின் பெயரால் பெருந்தொகையான நிதியையும் சேகரித்துள்ளனர். இந்நிதியிலிருந்து ஒரு சிறு பகுதியேனும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கு வழங்கவில்லை. அத்துடன் இவ்வாலயம் புனரமைப்புச் செய்வதற்காக அமைக்கப்பட்ட சபையானது சட்டத்துக்கு முரணானது எனவும், இச்சபையைக் கலைக்க வேண்டுமெனவும் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் TR{163 என்ற வழக்கையும் தாக்கல் செய்திருந்தனர். குறித்த வழக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் வரை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இவ்வழக்கைத் தாமாகவேவாபஸ் பெற்றுக்கொண்டனர்.

இப்படியாக இவ்வாலயக் கட்டுமானப் பணிகளையும், நிர்வாக நடவடிக்கைகளையும் குழப்புவதற்கு தொடர்ந்தும் முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்த போதும் இச்சபையினர் ஆலய முக்கிய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து கும்பாபிசேகத்தினை 2012ஆம் ஆண்டில் சிறப்புற நிறைவேற்றியிருந்தனர். அத்துடன் வருடாந்த உற்சவத்தினையும் நான்காவது வருடமாக இவ்வருடம் நடாத்திக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாலய வளர்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத இக்குழுவினரும் அவர்களுக்குத் துணை போகின்ற நாகர்கோவில் வடக்கைச் சேர்ந்த புலம் பெயர் வாழ் சில நபர்களும் சேர்ந்து தங்கள் பணபலத்தின் மூலம் ஏறக்குறைய (100) நூறு வரையான குழப்பகாரர்களை ஒழுங்கு செய்துகொண்டு 6ஆம் திருவிழா மதியபூசை நேரத்தில் மேற்கொண்ட மிகவும் மோசமான உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் காரணமாக ஆலயத்திலிருந்த அடியார்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியதுமான குழப்பமே குறித்த இணையதளத்தில் வந்த செய்தியாகும்.

குறித்த ஒன்று தொடக்கம் ஆறு வரையான திருவிழாக்கள் சம்பந்தமான விடயமே இவர்கள் குழப்பத்தை எற்படுத்துவற்கு சித்தரித்த கருப்பொருள் என்பதுடன் அதில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் உண்மைக்குப் புறப்பானது எனவும் இவ்வாலயத்துக்கு நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையொன்று நியமிப்பதற்கு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் இது சம்பந்தமான மேலதிக தகவல்களை வெளியிடமுடியாத நிலையிலுள்ளோம். மேலும் மிக விரைவில் இவ்வாலயத்துக்கு வருடாந்த உற்சவ உபயகாரர்கள் மத்தியிலிருந்து நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையொன்று தெரிவுசெய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.