நாகேஸ்வரப் பெருமானை எம்மவர் சிறைமீட்டவன் என்றும் அழைப்பர். அதற்கும் கப்பல் திருவிழாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இப்பதியில் புரட்டாசி மாதத்தில் பத்துத் திருவிழாக்கள் நடைபெறுகின்றது.. இதில் கப்பல் திருவிழா புரட்டாசி மாத பூரணையின் பின் வருகின்ற பிரதமை திதியில் ஏழாவது விழாவாக வருடாவருடம் நடைபெறுகின்றது. இலங்கையிலுள்ள சிவதலங்கள் எதிலும் கப்பல் திருவிழா கொண்டாடப் படுவதில்லை. ஆனால், எமது நாகர்கோவில் கிராமத்தில் மட்டும் மிக விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றது. இவ் விழாவிற்கும், இக் கிராமத்திற்கும், இப்பதிக்கு வடக்கே உள்ள கவுத்தந்துறை துறைமுகத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதைக் காணலாம். நாகம்சரிந்த வாய்க்கால் என்று எம்மவரால் அழைக்கப்படும் பாதையொன்று இத்துறையிலிருந்து பூர்வீக நாகதம்பிரான் ஆலயம்வih பள்ளமான பகுதியாக இருப்பதை இன்றும் நாம் காணலாம்.

முன்னொரு காலத்தில் தென்னிந்தியாவில் சம்புத்தீவு என்னும் பிரிவைச் சேர்ந்த திருவனந்தபுரம் என்றகிராமம் பெருமழை காரணமாக அழிந்து பெருந்தொகையான மக்கள் இறந்தும் போயினராம்.. இப்பகுதியில் மக்களைக் குடியேற்றுவதற் விரும்பிய அந்நாட்டு மன்னன் சேர,சோழ,பாண்டிய மண்டலங்களில் ஒன்றாக விளங்கிய இலங்கைத் தீவிலிருந்து மக்களைக் கொண்டு செல்வதற்காக தனது சேனைத் தலைவர் களையும் படைகளையும் அனுப்பி இருந்தானாம்.. இப்படைகள் தனுஸ்கோடிக்கரையாக காங்கேசன் துறை, மயிலிட்டி, வல்லிவெட்டித்துறை, பருத்தித்துறை, கற்கோவளம் ஆகிய பகுதிகளில் வியாபாரத்தை மேற்கொண்டு அங்குள்ள மக்களில் சிலரையும் ஏற்றிக்கொண்டு நாகர்கோவில் கவுத்தந்துறையில் புரட்டாசி மாதம் நங்கூரமிட்டனராம்.

ஏழு நாட்களாகத் தங்கிநின்ற போதும் ஒருவர்கூடப்போய் இவர்கள் கொண்டுவந்த பொருட்களை வாங்கவில்லையாம். பொருட்களை வாங்கவில்லையென்று துரையவர்கள் கவலைப்பட வில்லையாம். ஆனால் இப்பகுதி மக்களுடைய பொலிவிழந்த முகங்களையும்,குழிவிழுந்த கண்களையும், மெலிந்த தேகங்களையும் பார்க்கும்போது கவலையாக இருப்பதாகக் கூறுகிறார். எனவே தாங்கள் கொண்டுவந்த வாசனைத் திரவியங்கள், தீன்பண்டங்கள் யவுளிவகைகள்,விளையாட்டுப் பொருட்கள் முதலியவற்றைக் கொடுத்து இவர்களையும் தங்களுடன் வந்து பெருமழையினால் அழிந்த திருவனந்தபுரம் பகுதியில் குடியேறி சந்தோசமாக வாழும்படி அழைப்பு விடுக்கிறார் இப்பகுதி மக்கள் பொருட்களையும் வாங்கவில்லை.

அவர்களுடன் செல்வதற்கு மறுப்பினையும் தெரிவித்தார்கள்.கோபமடைந்த துரையவர்கள் கூறுகிறார் தனது படைவீரர்கள் மலைபோன்ற தோற்றமும்,, நீண்டமூக்கும், தூங்கியபுருவமும், அகன்றவாயும், சுழலும் கண்களும், சூள்கொண்டாற்போல் பெருவயிறும் உடையவர்கள். ஈவிரக்கமற்றவர்கள். எவ்வளவு கூறியும் நீஙகள் வரமறுப்பதால் எனது படைவீரர்களுக்கு கட்டளையிடப்போகிறேன் உங்கள் எல்லோரையும் கப்பலில் ஏற்றும்படி.படையினர் வலுக்கட்டாயமாக மக்களைக் கப்பலில் ஏற்றுகின்றார்கள். .எம்பதி;மக்களை அன்னியர் சூறையாடுகிறார்களே என மக்கள் ஓலமிடுகிறார்கள். நாகதம்பிரானே!உன்கண்தான் குருடானதோ,காதுதான் செவிடானதோ எம்மக்களைக் காப்பாற்றுவாயாக என்று தமது குலதெய்வம் நாகதம்பிரான் முன்னிலையில் ஓலமிட்டு முறையிடுகிறார்கள். கப்பல் பிரயாணத்துக்கு ஆயத்தமாகிறது. கப்பல் நகர மறுக்கிறது. படையினர் பாய்மரங்களை பரிசோதிக்கிறார்க்ள். பாய்மரத்திலே பாம்பொன்று காணப்படுகிறது. ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ படையினர் கப்பல்துரைக்கு அறிவிக்கிறார்கள். சாப்பத்தை வெட்டும்படி கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. படையினர் சர்ப்பத்தை வெட்டுகிறார்கள்.அடியார்க்கெளியனாகிய நாகேஸ்வரப்பெருமான் தனது திருவிளையாடலைக் காட்டத் திருவுளங்கொண்டு வெட்டுண்ட சர்ப்பத்தின் இரத்தத் துளிகளிலிருந்து பல ஆயிரம் சர்ப்பங்கள் தோன்றி படையினரைக் கலங்கவைக்கிறார்.

இப்பொழுது படையினரில் ஒருவர் ஆவேசம்கொண்டு கூறுகிறார். இப்பகுதி மக்களை இறக்கிவிட்டால் கப்பல் நகரும் என்கிறார்;. கப்பலில் பலஇடத்து மக்களும் இருக்கிறார்கள் இப்பகுதி மக்களை எப்படி அடையாளம் காணலாம் என்று கப்பல்துரை வினவுகிறார். ஆவேசக்காரர் மாவினை அள்ளிவீசுகிறார் மாக்குறி கண்டவர்களை இறக்கினால் கப்பல் நகரும்; என்கிறார்.மாக்குறி கண்டவர்களை இறக்குமாறு கப்பல்துரை பணிக்கிறார்.மாக்குறி கண்டமக்கள் இறக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரையும் இறக்கும் போது ஒவ்வொரு பாம்பும் இறங்குகிறது. ஆனால் கப்பல் நகரவில்லை. மீண்டும் ஆவேசகாரரிடம் கப்பல்துரை வினவுகிறார். கப்பல் நகரவில்லையேயென. ஆவேசகாரர் கூறுகிறார் கீழ்தளத்தி ஒரு அறையில் ஒரு அழகிய பெண் பிள்ளையையும் அவளது விளையாட்டுத் துணையாகிய ஒரு பூனைக் குட்டியையும் மறைத்து வைத்தீரக்கிறீர்கள். அவர்களையும் இறக்கினால் கப்பல் நகரும் என்கிறர்.

பெண்பிள்ளையும் பூனைக்குட்டியும் இறக்கப்படுகின்றன. கப்பலில் இவர்களுடன் காணப்பட்ட இரண்டு பாம்புகளும் இறங்குகின்றன. எம்பதி மக்களைக காக்கும் எம்பரம்பொருள் ஐந்துதலை நாகமாக காட்சிகொடுக்கிறார். அச்சத்தாலும், ஆனந்தத்தாலும் அடியற்றமரம் போல் வீழ்ந்து வணங்குகிறார்கள். நாகர்பதிவாழ் மக்களை இறக்கியதும் கப்பல் நகரத் தொடங்கியது. இதனால் நாகேஸ்வரப் பெருமானை ‘சிறைமீட்டவனே’ என்றுகூறி எமது மக்கள் வணங்குவதும் உண்டு. ஐந்துதலை நாகபாம்பாக காட்சிகொடுத்த எம்பெருமான் கவுத்தந்துறையில் இருந்து தற்போது நாகதம்பிரான் கோயில் கொண்டீருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்ததாம். கவுத்தந் துறையிலிருந்து எம்பெருமான் வந்தபாதையை எம்மவர் ‘நாகம்சரிந்த வாய்கால்’ என்று அழைக்கின்றனர். கவுத்தந்துறையில் இருந்து எம்பெருமான் கோயில் கொண்டிருக்கும் இடம்வரை கோயிலின் பின் புறமாக இப்பொழுதும் இவ்விடம் பள்ளமா இருப்பதைக் காணலாம்.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய பரிபாலனசபை

Leave a Reply

You must be logged in to post a comment.